சென்னை,

ஜெயா டிவி, விவேக் வீடு, கோட நாடு எஸ்டேட் உள்பட பல இடங்களில் இன்று 5வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

 

“ஆபரேஷன் கிளீன் மணி” என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில்  4 போலி கம்பெனிகளை சசிகலா தரப்பினர் நிர்வகித்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், தற்போது சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால்,அவர் ஏற்கனவே ஜெ முதல்வராக இருந்தபோது, அவர் பெயரை சொல்லி  நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. மன்னார் குடி மாபியா என்று அழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினர் திருச்சியை சுற்றியும் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, மன்னார் குடி மாபியாக்களை குறித்து வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 1800 பேர் இதற்காக களத்தில் குதித்தனர். ஒரே நேரத்தில் 200 இடங்களில் தொடங்கிய சோதனை இன்று 5வது நாளாகவும் பல இடங்களில் நீடித்து வருகிறது.

இந்த சோதனையின்போது, சசிகலா குடும்பத்தினர், அவர்களது நண்பர்கள், வழக்கறிஞர்க, டிரைவர்கள், ஜோதிடர்கள், உதவியாளர்கள் உளப்ட   355 பேரை இலக்கு வைத்து சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதர வாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இதில், மிக முக்கியமான நிறுவனங்கள் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகியவை ஆகும்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதைன 5-வது நாளாக இன்று திங்கள்கிழமையும் நீடித்து வருகிறது.

. ஜெயா டிவி, ஜெயா டிவி தலைமை நிலைய நிர்வாகியும் இளவரசின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

நாட்டில் இதுவரை நடைபெற்ற சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய சோதனை என்றும், இந்த சோதனை யில்   ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும்,  அந்த ஆவணங்களை சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினரின் கிடுக்கிப்பிடி சோதனை காரணமாக மன்னார் குடி மாபியாக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாக கூறப்படுகிறது.