டிடிவியிடம் இன்று 5வதுநாளாக விசாரணை! திகாரில் அடைக்கப்படுவாரா?

டில்லி,

ரட்டை இலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால், அவர் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க 50கோடி ரூபாய், தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டில்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இன்று 5வது நாளாக டில்லி விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து டிடிவி தினகரனின் 5 வங்கிக் கணக்குகள் மற்றும் அதில் செய்யப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னைக்கு வந்துசென்ற பின்னர், தினகரனின் கணக்காளரை அழைத்து டில்லி குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஹவாலா ஏஜன்ட் அளித்த தகவலின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் செல்போனையும் சென்னையில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் சுகேஷ்-தினகரன் இடையிலான உரையாடல்கள் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்நிலையில் தினகரனின் 5 வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவருடைய போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால்,  அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.