‘கோச்சடையான்’ கடன் வழக்கு: நிலுவை தொகையை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

டில்லி:

டிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடன் நிலுவைத் தொகையை  வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த நிறுவனமோ செலுத்த வேண்டும் என்று மீண்டும் உறுதிபடுத்தி உள்ளது.

இந்த வழக்கில், லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால மனுவை தள்ளுபடி செய்வதாகவும், ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தாங்கள் பிறப்பித்த  முந்தைய உத்தரவு தொடரும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டனர்.

லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்த் பெருத்த நஷ்டத்தை சந்தித்தார்.

இந்த படம் தயாரிக்க ஆட்பீரோ என்ற  நிறுவனத்திடம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான  லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஆட்பீரோ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி  முற்பகல்  நடைபெற்றது. அப்போது, பணத்தை ஏன் செலுத்தவில்லை என்றும்,  எப்போது செலுத்துவீர்கள் என்று லதா ரஜினிகாந்துக்கு  கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து பகல் 12.30 மணிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் 12.30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 6.2 கோடி ரூபாயை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கோச்சடையான் பட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 10 கோடி பாக்கியில், ரூ 9.20 கோடி வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ. 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம், இந்தப் பாக்கிக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மீடியா ஒன் நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மீடியா ஒன் நிறுவனத்தின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த நிறுவனமோ நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற தங்களுடைய முந்தைய உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.