சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று புதிதாக இரண்டாயிரத்து 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 30 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாயிரத்து 644 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 994 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 686 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 533 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவில் இருந்து 792 பேர் நலம் பெற்றதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிற மாவட்டங்களை பொறுத்தவரையில், செங்கல்பட்டில் 145 பேரும், கோவையில் 248 பேரும், சேலத்தில் 110 பேரும், திருவள்ளூரில் 136 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.