6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும், விமான நிலையங்களை மேம்படுத்த  ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ 20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த திட்டம் குறித்து 3 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக முதல் நாளில் சிறுகுறு தொழிலாளர்களுக்காகவும், 2வது நாளன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் 3வது நாளான நேற்று விவசாயிகளுக்காகவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இன்றும் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது:  500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் , நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

நிலக்கரியை வெட்டி எடுக்கும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வணிக ரீதியாக நிலக்கரி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதில் முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்திய வான்பரப்பில் விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.  இதன் மூலம் பயண நேரம் குறையும், எரிபொருள் செலவும் குறையும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி செலவு மிச்சமாகும். மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்.

விமான நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் அரசு, தனியார் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் நடத்தபப்டும். ஒட்டு மொத்தமாக விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.2300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

You may have missed