எடியூரப்பா தூண்டிலில் சிக்கிய  6 காங்.எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடக அரசியலில் நாளை முக்கிய திருப்பம்…

எடியூரப்பா தூண்டிலில் சிக்கிய   6 காங்.எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடக அரசியலில் நாளை முக்கிய திருப்பம்…

‘’25 முதல் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க கோடி ரூபாய்கள் தருவதாக பா.ஜ.க. ஆசை காட்டியது. அவர்கள் வலையில் சிலர் சிக்கி விட்டது உண்மை’’என்று பெங்களூருவில் நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா புலம்பி இருக்கிறார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பாற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழப்போவதை அவர் உறுதி செய்து விட்டதாகவே-இந்த புலம்பல் – அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அங்கு காங்கிரஸ் ஆதரவில்  முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் –மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி.

ஒரு நாள் முதல்வரான பா.ஜ.க.தலைவர் எடியூரப்பா, குமாரசாமியை விரட்டி விட்டு, அந்த நாற்காலியை கைப்பற்ற சில மாதங்களாகவே காய் நகர்த்தி வருகிறார்.

அந்த நாற்காலி அவருக்கு கிடைத்து விடும் என்றே தோன்றுகிறது.

கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி கொறடா ஆணை பிறப்பித்திருந்தார். ஆனால் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எடியூரப்பா விரித்த வலையில் அவர்கள் வீழ்ந்து விட்டனர்.அதனையே சித்தராமய்யா , நேற்றைய கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்து,ஆட்சி கவிழப்போவதை சூசகமாக உணர்த்தி உள்ளார்.

சட்டப்பேரவையில் குமாரசாமி நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆறு அதிருப்தியாளர்களும் நாளை ,காங்கிரசில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

அரசுக்கு அணுசரனையாக இருந்து வந்த 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே தங்கள் ஆதரவை விலக்கி கொண்டுவிட்டனர்.

சொற்பபெரும்பான்மையில் ஊசலாடிகொண்டிருக்கும், குமாரசாமி அரசு ,பிழைக்குமா –ஜீவித்திருக்குமா என்பது நாளை தெரியும்.

–பாப்பாங்குளம் பாரதி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6 congress mla', CM Kumarasamy, congres jds govt, Karnataka politics, yeddyurappa hand, எடியூரப்பா, கர்நாடக அரசியல், காங்கிரஸ் அரசு, குமாரசாமி
-=-