டில்லி மெட்ரோ நிலையம் : தேசத் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள் எனக் கோஷமிட்ட 6 பேர் கைது

டில்லி

டில்லியில் உள்ள ராஜிவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ‘தேசத் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள்’ எனக் கோஷமிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் வலுப்பெற்று வருகிறது.   டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.    இந்த வன்முறையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.   நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நகரில் பல இடங்களில் மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன.   பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  நகரின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் நேற்று மதியம் டில்லியில் உள்ள ராஜிவ் சவ்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆறு பேர் திடீரென “தேசத் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள்” என கோஷம் இட்டுள்ளனர்.

அவர்களை டில்லி மெட்ரோ ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.   அந்த ஆறு பேர் கோஷம் இடுவது வீடியோ பதிவாக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.   இந்த நிகழ்வு குறித்து நேற்று டில்லி  மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “இன்று மதியம் சுமார் 12.30 மணிக்கு ஆறு ஆண்கள் ராஜிவ் சவுக் மெட்ரோ நிலையத்தில் ’தேச துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள்’ என கோஷம் போட்டுள்ளனர். அவர்களை நாங்கள் ராஜிவ் சவுக் மெட்ரோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.  அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed