தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது: வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அதன் காரணமாக நீலகிரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.