லேசியாவில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறை என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுங்கள்  என்று அந்நாட்டு  பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் பொதுமக்களுக்கு டிவி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசியாவில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சக  ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை ஒரு நடமட்டக் கட்டுப்பாடு ஆணையை  தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) நடைமுறைப்படுவதாக அந்நாட்டின்  பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்திருந்தார்.

அந்த 14 நாள் ஆணை, நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களையும் மூடுதல் உள்பட பொதுமக்களும் தேவையின்றி கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதை பலர் மதிக்காமல் வெளியே சுற்றித்திரியும் நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான தமிழர்களும் வசித்து வருவதால், அவர்களுக்கு புரியும் வகையில் தமிழிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும், கட்டுப்பாட்டை மீறினால் 1000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டுமே வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மூன்றாவது நாள் இன்று.

இனி யாராவது வெளியே தலை காட்டுவார்களா என்ன..

இந்த நிலையில், மலேசிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும்  வேண்டுகோள் விடுத்து டிவியில் உரையாற்றினார்.

“பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு கீழ்ப்படியுமாறு மக்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஊருக்கு திரும்புவதற்கான விருப்பத்தையும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வீட்டிற்கு வெளியே எந்த சமூக நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள வேண்டாம்”.“மக்களும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறைபடுத்தப்படும். இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். மக்கள் எப்போதும் தங்களை சுத்தத்தைப் பேண வேண்டும் மற்றும் பரவலைத் தடுக்கக்கூடிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.