டெல்லி:

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால், தற்போது வரை ஏடி.எம்.களில் பணம் இருக்கிறதா என்ற கேள்வியே இந்தியர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. புழக்கத்தில் இருந்த 86.9 சதவீத ரூபாய் நோட் டுக்கள் திரும்ப பெறப்பட்டது.

இதனால் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர். புதிய ரூ. 2,000, ரூ. 500 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு கடந்த ஜனவரியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏ.டி.எம்.களில் தாரளமாக பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான இந்திய வங்கிகளில் பண புழக்கம் அதிகரித்து சகஜ நிலை திரும்பிவிட்டது. பண பற்றாகுறை இல்லை என்று கூறுகின்றன. ஆனால் வார இறுதி நாட்களில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் முடங்கி வி டுகிறது. ஆனால், தற்போது வரை பண புழக்கத்தில் பற்றாகுறை இருப்பதாகவே நிதி தளவாட அமைப்புகள் கூறி வருகின்றன.

‘‘ஏ.டி.எம்.கள் பணமின்றி செயல்படுவதாக பல புகார்கள் வந்துள்ளது. இது உண்மை தான். மொத்தம் 60 சதவீத பணம் மட்டுமே மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. அதனால் ஏ.டி.எம்.களின் போதுமான அளவில் பணம் நிரப்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். வங்கிகள் கொடுக்கும் பணம் குறைவாக இரு க்கிறது’’ என்று நிதிதளவாட சங்க செயலாளர் ராவ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘மாத தொடக்கத்தில் வங்கிகள் ஏ.டி.எம்.களுக்கு போதுமான அளவுக்கு பணம் கொடுக்கின்றன. சம்பளம் தேதி என்பதால் இவ்வாறு வழங்கப்படுகிறது. அதன் பிறகு வழங்கும் பணத்தின் அளவை குறைத்துவிடுகின்றன. நாட்டின் பொருளாதாரத்திற்குள் மீண்டும் எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பதை ஆர்பிஐ தெளிவாக குறிப்பிடவில்லை’’ என்றார்.

கடந்த மார்ச் மாதம் 78 சதவீத வாடிக்கையாளர்கள் ரொக்கமாக பணம் செலுத்தியுள்ளனர் என்று ஆர்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பு அமல்படுத்த முதல் 2 மாதங்களில் மட்டுமே ரொக்க பரிமாற்றம் குறைவாக இருந்தது. அடுத்து ஜனவரியில் இது உயர்ந்துவிட்டது.

பணம் எடுக்கும் அளவை தளர்த்திய பிறகு ரொக்க பரிமாற்றம் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது. கடந்த நவம்பர் 4ம் தேதி வரை ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. மார்ச் இறுதி வரை ரூ. 13.32 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இதில் ரூ. 8.58 லட்சம் கோடி 500 ரூபாய் நோட்டுக்கள். ரூ. 6.86 லட்சம் கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.