சென்னை,

யர்நீதிமன்றத்திற்கு மேலும் 6 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் 75 நீதிபதிகளுக்கான இடங்களைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 54 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கூடுதலாக 11 நீதிபதிகளை நியமிக்க கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்சநீதி மன்றத்திற்கு பரிந்துரைத்திருந்தார்.

அவர்களில், தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் எஸ். ரமாதிலகம் ( S. Ramathilagam ), ஆர். தரணி (R. Tharani), பி. ராஜமாணிக்கம் ( P. Rajamanickam), டி. கிருஷ்ணவள்ளி (T.Krishnavalli), பொங்கியப்பன் (R. Pongiappan), ஆர். ஹேமலதா (R. Hemalatha) ஆகிய 6 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவர்கள் விரைவில் சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.  மத்திய  சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தவுடன், அவர்களை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்கிறது.