சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 6 தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு  3 இடங்களும்,  மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

மற்ற கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்தது.  விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்ததாகவும், குறைந்த பட்சம் 9 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை கூட்டணி கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. . இன்று காலையில் நடைபெற்ற திமுக, விசிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு,   விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

முன்னதாக, நேற்று விசிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்கக் கூடாது என சிலர்  முழக்கமிட்ட நிலையில்,  அவர்களை சமாதானம் செய்த திருமாவளவன், தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற கொள்கைக்காக குறைவான தொகுதிகளை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும், கட்சித்  தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,  இன்று ஒன்றைப்பட இலக்கத்திலான தொகுதிகளை பெற விசிக ஒப்புக்கொண்டது. இதையடுத்து,  இந்த க கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி  கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது