சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள திருமாவளவன் பாஜக தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்ற நோக்கில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளது. இதையொட்டி, இரு கட்சிகளுக்கும் இடையேநடைபெற்ற பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்துஇரு கட்சிகளுக்கு  இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளும் தனி சின்னத்தில் போட்டியிடும் என்றார்.
தமிழகத்தில் ஜாதி மத சக்திகளை பாஜக வளர்கிறது. சமூக நீதியை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என குற்றம்சாட்டியவர், தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது . எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த பாஜக, பல மாநிலங்களில்  சதி செய்து ஆட்சியை பிடித்துள்ளது. சனாதனத்தில் இருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,

தமிழகத்தில் அ.தி.மு.க-வை அழிக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது என்றவர், நட்புக்கு நேர்மையாக பா.ஜ.க நடந்து கொள்ளாது  என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில்  மதவாதம் தலைதூக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தி.மு.க கூட்டணி செயல்பட்டு வருகிறது,  அதனால்,  திமுகவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.