உ.பி.யை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறி…? டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதன் பாதிப்பு முதல்முறையாக இந்தியாவில் கேரளாவில் உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினர். கொரோனா தொடர்பான சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ள இத்தாலி நாட்டு பயணிக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, 6 பேரும் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மாதிரிகள் அனைத்தும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.