சென்னை:

மிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்களில் 60சதவிகிதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் அமர்த்தப்படுவார்கள், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.பி.சம்பத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பதாகவும், தமிழகத் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,  தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில், 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், தொழில் தொடங்கியுள்ள சியட், ஃபாஸ்கான், போன்ற நிறுவனங்களில் அரசின் மானியத்துடன் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.