பெங்களூரு

ர்னாடகா மாநிலத்தில் சுமார் 60 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கர்னாடகா மாநிலத்தில் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் இந்த ஆண்டு மத்தியில் முடிவடைய உள்ளது.   அதையொட்டி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்னாடகா சட்டமன்றத்தின் 15ஆவது தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.    இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை கர்னாடகா தேர்தல் ஆணைய அதிகாரி சஞ்சிவ் குமார் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர், ”கடந்த 2013 தேர்தலின் போது சுமார் 4.36 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.  தற்போது அந்த எண்ணிக்கை 60 லட்சம் அதிகமாகி 4.96 கோடி ஆகி உள்ளது.   வாக்காளர் பட்டியலின் இறுதி வடிவம் வரும் 28ஆம் தேதி வெளியிடப்படும்.  தற்போது 2.51 கோடி ஆண் வாக்காளர்களும், 2.44 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.   மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4552 பேர் உள்ளனர்.

கடந்த 2013 தேர்தலின் போது முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.18 ஆக இருந்தது.  தற்போது அந்த எண்ணிக்கை 15.42 லட்சமாகி உள்ளது.   பெங்களூரு தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 5.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.    சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி தொகுதியில் குறைந்த பட்சமாக 1.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.   சராசரியாக ஒரு தொகுதிக்கு 2.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.”  என தெரிவித்தார்.