தொலைத்தொடர்பு நிறுவனங்களில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோர் 60000 பேர்!

புதுடெல்லி: லாபத்தில் செயல்பட்டு, அரசுகளின் உலகமயமாக்கல் கொள்கைகளால் நஷ்ட நிறுவனங்களாகிப்போன பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களில் அறிவிக்கப்பட்ட விருப்ப ஓய்வு திட்டத்தில் சேர இதுவரை 60000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே திணறும் நிலை ஏற்பட்டுள்ளதால், 50 வயதைத் தாண்டிய ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் செலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டத்தை அறிவித்தது.

இந்த இரண்டு அரசு நிறுவனங்களும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளும், ஜியோ போன்ற தனியார்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.

இத்திட்டத்திற்கான தகுதிவாய்ந்த ஊழியர்கள், நவம்பர் 5 முதல் டிசம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய 2 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 60000 பேர் விருப்ப ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1.5 லட்சம் பேரும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22000 பேரும் பணியாற்றி வருகின்றனர்.