கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் சஷ்டியப்த பூா்த்தி பூஜை: உறவினர்கள், உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு

திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் தோ்வுக்குழுத் தலைவருமான ஸ்ரீகாந்த்க்கு 60ம் ஆண்டு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்கடையூரில் தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அமிா்தகடேசுவரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் மட்டுமே ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூா்த்தி, மணிவிழா உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், திரைப்பட நடிகா்கள், அரசியல் பிரமுகா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பலர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இக்கோவிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் தோ்வுக் குழுத் தலைவருமான ஸ்ரீகாந்த்க்கு 60வது வயது பூா்த்தியடைந்ததையொட்டி, அவருக்கும், அவரது மனைவி வித்யாக்கும் சஷ்டியப்த பூா்த்தி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினா்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா். இதையறிந்த, அப்பகுதி கிரிக்கெட் விளையாட்டு வீரா்கள் வந்து ஸ்ரீகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்தனா்.