சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில்  30 பேர் உள்பட தமிழகம் முழுவதும்  இன்று 62 பேர்   டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இதுவரை 180 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

சென்னை  ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நோய் குணமான  30 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உதவிகளை வழங்கி,  கைகளை கழுவுதல் மற்றும் நம்பிக்கையுடன் இருப்பது குறித்து அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் பேசிய ஒருவர்,   “சுகாதாரப் பணியாளர்கள் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்தனர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். அவர்களை மேலும் சில வாரங்கள் அரசு கண்காணிக்கும். அவர்கள் 14 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்து வீடு திரும்பினர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த இளைஞரும், பெரம்பூர் ஜமாலியா பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சிறப்பு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து கைதட்டி அவர்களை வழி அனுப்பி வைத்தனர். தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு இருவரும் கைகூப்பி நன்றி தெரிவித்தனர். இருவரையும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் முன்னிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உற்சாகத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், 25 நாட்களுக்குப் பிறகு பூரண குணமடைந்து, வீடு திரும்பினார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைதட்டி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் களில், 50 வயதை கடந்த 7 பேர்உள்பட 10 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு  மாவட்டத் ஆட்சித் தலைவர் வினய், மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் 20 பேர் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் 5 பேர் குணமடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் மருத்துவர்கள் பழங்கள், மற்றும் முகக்கவசம் வழங்கி மகிழ்ச்சியுடன் கைத்தட்டி வழியனுப்பி வைத்தனர்.

இன்று மட்டும் மொத்தம் 62 பேர் நோய்த் தொற்றில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பி உள்ளனர்.

 புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரில் ஒரு நபர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து அந்நபரை மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.