சென்னை:

மிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் 62 இடங்கள் பதற்றமானவை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ந்தேதி  செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர்,  தமிழகத்தில் மொத்தமுள்ள 67, 720 வாக்குப்பதிவு மையங்களில் 7,780 மையங்கள்  பதற்றமானவை என போலீசாரால் கண்டறியப்பட்டிருப்பதாகவும், இந்த வாக்குப்பதிவு  மையங்களில் மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட மைக்ரோ அப்சர்வர்கள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு நடைபெறும்  என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 நாடாளுமன்ற தொகுதிகளும் 2 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கும் சேர்த்து  மொத்தம் ஆயிரத்து 707 மையங்களில், 7 ஆயிரத்து 832 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை எனவும் வட சென்னையில் அதிகபட்சமாக 45 லிருந்து 50 மையங்கள் வரை பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  பதற்றமான வாக்குப்பதிவு  மையங்களில் தலா 4 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக  610 துணை ராணுவத்தினர் பணிக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் 500 பேருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் தேர்தல் விதிகளை மீறியதாக 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.