திருவனந்தபுரம்: குடியரசு தினத்தில் கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியால் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 620 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காசர்கோடு முதல் தென்பகுதியில் உள்ள களியக்காவிளை வரை மனித சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், சிபிஐ தலைவர் கனம் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்தனர்.

மனித சங்கிலியில் சுமார் 60 முதல் 70 லட்சம் பேர் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மாலை 4 மணிக்கு மனித சங்கிலி தொடங்கியது. அதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட்டது.

பின்னர், அரசியலமைப்பை அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. மூத்த சிபிஐ (எம்) தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, காசர்கோட்டில் 620 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலியில் முதல் நபராகவும், எம் எ பேபி களியக்காவிளையில் கடைசி நபராக நின்றிருந்தனர். போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், முக்கிய நபர்கள் பலரும் பங்கேற்றனர்.