காபூல்

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண விழாவில்  தற்கொலைப் படையினர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியதில் 63 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தாலிபன் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து  போரிட்டு வருகின்றனர். இந்த போர் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது தாலிபனகளை தொடர்ந்து ஐ எஸ் தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு ஆப்கானிஸ்தான் தலைநகரில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இந்த பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமண நிகழ்வில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். திருமண விழாவில் நடந்த இசை நிகழ்வில் மேடை அருகே திடீர் என வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

இந்த வெடிகுண்டு விபத்தில் அதே இடத்தில் 20 பேர் மரணம் அடைந்தனர். மேலும் மருத்துவமனையில் 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் இந்த விபத்தில் சுமார் 180 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பில்லை என தாலிபன் இயக்கம் அறிவித்துள்ளது. அத்துடன் வேறு எந்த குழுவினரும் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்கவில்லை.