சென்னை:

மிழகத்தில் இன்று (ஜூலை 13ம் தேதி)  லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணி கள் ஆணைக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம்  63,869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதி மன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் இன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், வீட்டு வரி, இன்சூரன்ஸ் வழக்கு, சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடு, சம்பந்தப்பட்ட நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சாரப் பயன்பாடு,  தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்தமான ரிட் மனுக்கள், காசோலை மோசடி, ‘ குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் போன்ற ஏராளமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதன்படி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 அமர்வு, மதுரை கிளையில் 6 அமர்வு உள்பட மாநிலம் முழுவதும் 467 அமர்வுகளில்  வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின்போது, 1லட்சத்து 53ஆயிரத்து 44 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மொத்தம் 394 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரத்து 853 ரூபாய் மதிப்பிலான வழக்குகளில்  சமரசம் ஏற்பட்டது. மொத்ததில்  63 ஆயிரத்து 869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.