சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தினமும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில், 81 பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11,224ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் இன்று பலியாகி உள்ளதால்,  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை தலைநகரில் 6750 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 10 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் இதுவரை 3,26,720 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் 13,081 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.