நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!

கொல்கத்தா

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் நம்ப முடியாத பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம்.   இரும்பைத் தின்னவா முடியும் என்னும் கேள்விக்கு விடை அளிப்பது போல கொல்கத்தாவில் ஒரு மனிதர் இரும்பு ஆணிகளை விழுங்கியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  இது குறித்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணி புரியும் சித்தார்த்த பிஸ்வாஸ் தகவல் அளித்துள்ளார்.

அவர், “மேற்கு வங்க மாநில கோபர்தங்காவில் வசிக்கும் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது.  அவர் தினமும் ஆணிகளை விழுங்கி வந்துள்ளார்.  இது யாருக்கும் தெரியவில்லை.    அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.   அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவரை பரிசோதித்ததில் அவருடைய குடலில் சில ஆணிகள் இருப்பது தெரிய வந்தது.    அவர் உடல்நிலைக் குறைபாடு காரணமாக உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இயலவில்லை.

அவருடைய குறைபாடு நீக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மூலம் நீக்க முயன்றோம்.   காந்தங்களைக் கொண்டு மெல்ல ஆணிகளை எடுத்தோம்.   ஆணிகள் அனைத்தும் சுமார் 2 இன்ச் நீளமுள்ள ஆணிகளாக இருந்தன.   நல்லவேளையாக அவருக்கு வயிற்றில் இதனால் காயம் எதுவும் ஏற்படவில்லை.   மொத்தம் 639 ஆணிகள்  எடுக்கப்பட்டுள்ளன.   எங்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.   தற்போது அந்த நோயாளி உடல் தேறி வருகிறார்.   எங்கள் மருத்துவர் குழு அவரைக் கண்காணித்து வருகிறது.” என தெரிவித்தார்.