டில்லி:

நேற்று மாலை வடமாநிலங்களில் வீசிய புழுதிப்புயல் காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வடமாநிலங்களில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக மரங்கள், மின்சார போஸ்டுகள், விளம்பர பதாதைகள் உடைந்து விழுந்து பெருத்த சேதத்தையும், உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை டில்லி, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம், ஆந்திரா மாநிலங்களில் கடும் மழை யுடன் கூடிய புழுதிப்புயல் வீசியது. இந்த புழுதிப்புயலின் கோர தாண்டவத்துக்கு  64 பேர் பலியாகி உள்ளனர்.

இருந்தும், இன்னும் அந்த பகுதியில் மோசமான வானிலை தொடர்ந்து வருவதாகவும், மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் தங்களது வீடுகளிலேயே அடைந்து உள்ளனர்.

உத்தரபிரதேசம்:

உ.பி.யில் நேற்று மாலை கடும் மழையுடன் புழுதி புயல்  வீசியது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாது.  மாநிலத்தையே புரட்டிப்போட்ட இந்த புயல் காரணமாக 117 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

மேரும், இந்த புழுதிபுயல் காரணமாக  38 பேர் பலியாகி உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்காளம்

அதுபோல மேற்கு வங்காளத்தில் வீசிய ழுதிப்புயல் மற்றும் கடும் மழை காரணமாக 12 பேர் இறந்துள்ளதாகவும், இவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசம்

ஆந்திராவில் ஒருசில பகுதிகளில்  நேற்று வீசிய புழுதிப்புயலின் போது பேய் மழை பெய்ததாகவும், இதன் காரணமாக  12 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

டில்லி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து புழுதிப்புயலினால் தாக்கப்பட்டு வரும் தலைநகர்  டில்லியில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால், ஏராளமான மரங்கள், விளம்பர போர்டுகள் கீழே விழுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புழுதிப்புயல் காரணமாக நேற்று டில்லியில் விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது.  இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.

ஸ்ரீநகர்-டெல்லி இடையிலான தனியார் விமானம் அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு நேரிட்டது. வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்றும், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஹிமாலயா மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கடந்த வாரம்  வட மாநிலங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.