பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்கள் சொத்து மதிப்பு 2013ம் ஆண்டை விட 64 சதவீதம் உயர்ந்திருப்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீரமைப்புக்கான என்ஜிஓ சங்கம் சார்பில் ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள விபரம்…
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்கள் சொத்து மதிப்பு 2013ம் ஆண்டை விட 64 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான சிவகுமார், நாகராஜூ, சாமனூர் சிவசங்கரப்பா, பிரியகிருஷ்ணா, தேஷ்பண்டே ரகுநாத் விஸ்வநாத் ஆகியோரது சொத்து ரூ. 100 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு உயர்ந்திருப்பதில் பல கட்சிகள், சுயேட்சை எம்எல்ஏ.க்களுக்கும் அடக்கம். சராசரியாக 184 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.26.92 கோடியில் இருந்து ரூ.44.24 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சராசரியான சொத்து மதிப்பு ரூ.17.31 கோடி உயர்ந்துள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் 108 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 66 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் மீண்டும் போட்டியிடும் 49 பாஜக எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு கடந்த தேர்தலை விட 65 சதவீதம் அதிகரித்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ.க்களில் 24 பேரின் சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது.