தானம் அளித்த ரத்தம் சாக்கடையில் : அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு

தானமாகப் பெறப்பட்ட ரத்தம் சுமார் 65000 யூனிட்டுகளுக்கு மேல் தேதி காலாவதி ஆனதாலும்,  அவைகளை வைத்திருக்கும் பைகள் சேதம் அடைந்ததாலும், சாக்கடையில் கொட்டப்பட்டன.

ரத்ததானத்தின் அவசியத்தை பல ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.  அதே போல தானமளிப்பவர்களின் எண்ணிக்கையும், ரத்தம் வேண்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இப்படி இருக்க, ஒவ்வொரு வருடமும் பல யூனிட் ரத்தம் வீணாக்கப் படுகிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை.

பெங்களூருவில் மட்டும் சுமார் 65க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு ரத்தவங்கிகள் உள்ளன.  இந்த வங்கிகளில் ரத்த தானம் பெறப்பட்டு, அந்த ரத்தம் சேமித்து வைக்கப்படுகிறது.   தானம் பெறப்படும் ரத்தம் எவ்வளவு எனவும்  இந்த ரத்தம் முழுவதும் தேவைப்படுவோருக்கு போய் சேருகிறதா என்பதையும் கர்நாடகா சட்டசபையில் சோமண்ணா என்னும் பாஜக உறுப்பினர் கேள்வி ஒன்றில் கேட்டிருந்தார்.  அதற்கு கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் குமார் பதிலளித்தார்.

அப்போது இந்த தகவலை ரமேஷ் குமார் தெரிவித்தார்.

கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 64,361 யூனிட் ரத்தம் சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டதாகவும், இதில் 32,644 யூனிட்டுகள் காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறினார்.  2016-17 ஆம் ஆண்டில் 64,913 யூனீட்டுகளுக்கு இதே நிலைமையாம், அதில் 32644 காலாவதி ஆனதாம்.  மொத்தத்தில் 1,88,537 யூனிட்டுகள் ரத்தம் கடந்த 3 ஆண்டுகளில் வீணடிக்கப் பட்டுள்ளது என்பது அவருடைய பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

”உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்” என விளம்பரம் சொல்கிறது.  முதலில் உதிரத்தை வீணடிக்காமல் காத்து வைக்கலாம் என்பதை மக்களின் மனம் சொல்கிறது.