சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு ரூ.6,600 கோடி நிதி: ஜப்பான் உதவி

டில்லி:

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ஜப்பான் அரசு சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணியின் 2வது கட்ட விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம் உள்பட 3 திட்டங்களுக்கு ஜப்பான் அரசு 105 பில்லியன் யென் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது  இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 600 கோடி.

சென்னையில் அதிகரித்தும் வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்ட விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.

மேலும்,  பால் விற்பனையை பெருக்கி விவசாயிகள் பலனடையும் வகையில் பால் பண்ணை திட்டதிற்கான கடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் பால் பொருட்கள் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.