பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் 68% கலப்படம் – அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் 68 சதவிகிதம் கலப்படம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்படம் உள்ள பால்பொருட்களை எடுத்துக் கொண்டால் 2025ம் ஆண்டிற்குள் 87 சதவிகித மக்கள் புற்றுநோயால் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பதப்படுத்தி விற்கப்படும் பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கலப்படம் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விலங்கு நல வாரிய உறுப்பினர் மோகன் சிங் அலுவாலியா கூறிகையில், “ இந்தியாவில் தனியார் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாலில் கலப்படம் செய்யப்படுகின்றன. சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பொருள், எண்ணெய் உள்ளிட்டவைகள் பாலில் கலக்கப்படுகின்றன. இவை உயிருக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடியவை.
இந்தியாவில் நாள்தோறும் 14.68 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவிகித பால் மற்றும் பால் கலந்த பொருட்கள் கலப்படமாகவே உள்ளது. இதனால் உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் பாதிக்கப்பட கூடும். பாலில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 87 சதவிகித மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட கூடும் என உலக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என அவர் கூறினார்.