1,600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த 68 வயது முதியவர் உயிரிழப்பு 

சண்ட் கபீர் நகர்:
1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு  பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவர் 68 வயதான முதியவர் ராம் கிர்பல். மும்பையில் பணியாற்றி வந்த இவர் தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சண்ட் கபீர் நகருக்கு செல்ல முடிவு செய்தார். இதை தொடர்ந்து அவர், 1500 கிலோ மீட்டர் பயணத்தை டிரக்கில் துவக்கினார்.
நான்கு நாள் பயணம் செய்த இவர், தனது வீட்டை அடைய 30 கிலோ மீட்டர் இருந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்தனர்.
வேலை இழப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து தப்பிக்க டெல்லி, மும்பை போன்ற நகர்ப்புற மையங்களை விட்டு வெளியேறி வரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கிர்பலும் ஒருவர்.  சீக்கிரம் வீட்டிற்கு வருவதற்கான, அரசு அறிவித்துள்ள சிறப்பு ரயிலை விட்டு விட்டு,  அவர் டிரக்கில் ஏற்றி வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த கிர்பாலின் உடலை அவரது மகன் கடந்த செவ்வாய்க்கிழமை காகர் ஆற்றின் கரையில் தகனம் செய்தார்.  கிர்பால் கொரோனா பாதிப்பு இருப்பதால்,  அவரது மகன் மட்டும் பாதுகாப்பு உடையுடன் இறுதி சடங்கு செய்ய காவல்துறையினர் அனுமதித்தனர். இவரது குடும்பத்தினர் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து  இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.


கிர்பால் மும்பையில் ஒரு பெயிண்ட்-பாலிஷ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் கடந்த 20 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வருவார் என்றும் கிர்பாலின் மனைவி தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிர்பாலுக்கு  இரண்டு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
கிர்பாலுடன்,  டிரக்கில் மொத்தமாக எத்தனை பேர் பயணம் செய்தனர் என்று  இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும், கிர்பாலுடன் டிரக்கில் வந்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.