திருச்சி: 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

திருச்சி அருகே சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் தமிழிகத்திற்கான அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொலை நோக்கு திட்டங்களை அறிவித்து ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் எதிர்காலத்திற்கு திமுக திருச்சி மாநாடு ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. கடலளவு திமுக செய்துள்ள சாதனைகளை சொல்ல தனி மாநாடு தான் போடவேண்டும்.

திமுக உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது அதிமுக ஆட்சியின் பழக்கமாக இருக்கிறது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்து, அதனை அதிமுக தான் சீர்குலைத்தது, மே 2ம் தேதி தமிழகத்துக்கு புதிய விடியல் பிறக்கும். தமிழகத்தின் முக்கியமான 7 துறைகளை வளர்த்தெடுப்பதே திமுகவின் நோக்கம் என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலினின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் விவரம் வருமாறு:

  • ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ1,000 உரிமை தொகை வழங்கப்படும்.
  • தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை.
  • கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்.
  • மனித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்.
  • பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும்.
  • பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும்.