அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு! சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில்  7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக,  சட்ட நிபுணர்களுடன் தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவாக மாறி வருகிறது. இதை தடுக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில்  இடம் கிடைக்கும் வகையில்,  7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம்  16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால்,மசோதாவுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் கவர்னர்  ஒப்புதல் வழங்காமல்  இழுத்தடித்து வருகிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் நீட்  தேர்வு முடிவுகள் கடந்த (அக்டோபர்)  16ம் தேதி வெளியாகி உள்ளது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்ப்ப்பு எழுந்துள்ளது. இதனால், மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழகஅரசு சார்பில் 5 மூத்த அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினர். அத்துடன், தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டும் என்றால், 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே நடத்த முடியும் என்றும்  கவர்னரிடம் தெரிவித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதையடுத்து, தமிழகஅரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதா குறித்து டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, கவுன்சிலிங் நடத்தப்படாது என தமிழகஅரசும் உறுதியாக உள்ள நிலையில், கவர்னரின் மவுனம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.