ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்று வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று விளக்கம் அளித்தார்.எடப்பாடி பழனிசாமி விளக்கம்

நீலகிரி மாவட்டத்தில், ரூ.320 கோடி திட்டங்கள்  தொடங்கியும்,  ரூ.199 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர், ரூ.2,900 கோடியில் குந்தா நீர்மின்திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 2023–ம் ஆண்டு உற்பத்தியை துவங்கும் என்றும் முதல்வர் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்துரையாடி அவர்களது குறைகள், கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.

 இதுவரை 25 மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்ட முதலமைச்சர் இன்று 26வது மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 123 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.189 கோடியே 33 லட்சம் மதிப்பில் 67 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அம்மாவின் அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக இன்று கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து 2500க்கு கீழ் வந்துள்ளது. அம்மாவின் அரசு வேகமாகவும் துரிதமாகவும் அரசு எந்திரத்தை முடுக்கி விட்டதின் பயனாக மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆரம்பத்தில் அம்மாவின் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதன் காரணமாக இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது. நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் வருவாய், உள்ளாட்சித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறைகளின் ஊழியர்களும் இணைந்து செயல்பட்டு கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டதால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 6826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 6504 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று வரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 2453 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்று இருக்கின்றன.

காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டு தினசரி 64 முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 6363 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 368 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் பரிசோதனையில் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 11 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் 7.5% ஒதுக்கீடு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தான் மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு உண்டு என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டார்கள்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தான் மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு உண்டு என்று திட்டவட்டமாக கூறினார்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று நிருபர்கள் கேட்டனர்.

பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று நிர்வாகமும், பெற்றோர்களும் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊடகங்கள் வாயிலாகவும் பத்திரிக்கைகள் வாயிலாகவும் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே வரும் 9–ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.

ரூ.447 கோடியில் மருத்துவ கல்லூரி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கை இன்று நனவாகி இருக்கிறது. ரூ.447 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க உத்தரவிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இது மலைப்பிரதேசம். நோய்வாய் பட்டால் உயர்சிகிச்சை பெற இப்போது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இனி இங்கு பிரமாண்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படுவதால் இங்கே உயர்தர சிகிச்சைகளை பெற முடியும்.

முதன்முறையாக பழங்குடியின மக்களுக்கு ரூ.15.70 கோடி செலவில் மின் இணைப்புடன் கூடிய 1826 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 705 கி.மீ. சாலைகள் ரூ.600 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

37,500 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.152 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500 பழங்குடியின மக்களின் வீடுகள் ரூ.5 கோடியில் பழுது பார்க்கப்பட்டன. குன்னூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வசதிக்காக 9 முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு காய்கறிகளை பதப்படுத்தி, சுத்தப்படுத்தி விற்க வசதி உள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.144.34 கோடி செலவில் 4348 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

குந்தா நீர்மின்திட்டம்

குந்தா நீர்மின்திட்டம் ரூ.2900 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 26 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 2023 – 24–ல் முழு மின்உற்பத்தி கிடைக்கும். இங்குள்ள தாவரவியல் பூங்கா நவீனப்படுத்தப்படும்.

இங்கு தேயிலை தான் முக்கிய பயிர். இங்கு தேயிலை தர பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் தனியாரிடம் தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே அரசு இங்கு ஒரு தேயிலை தர பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, இங்கு பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்

இது ஒரு மலைப்பிரதேசம். இங்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும். யாராவது அடிபட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக ‘ஏர் ஆம்புலன்ஸ்’ ஏற்படுத்த அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் நோய் பரவலை தடுப்பது என்பது கடினமான காரியம். சுற்றுலா பயணிகள் வருவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் முழு அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் என்றும் முதல்வர் கூறினார்.

உற்சாக வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு நடத்த வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஏராளமான பொதுமக்களும் திரண்டிருந்து வாழ்த்து கோஷம் எழுப்பி முதல்வரை அன்புடன் வரவேற்றார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில்,  அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பில் சேர இடஒதுக்கீடு வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.