சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசானது, அரசாணையை வெளியிட்டு உள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் இதுவரை ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் வேண்டுமென்று தாமதிப்பதாக அரசியல் கட்சிகள் தரப்பில் புகார்கள் கூறப்பட்டன. இந் நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மசோதா மீது முடிவெடுக்க தமக்கு 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.