திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில், பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் மாயமான விவகாரத்தில், நகைகளை கையாடல் செய்ததாக வங்கி ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை  மாவட்டம் அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைசியா வங்கியில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சமீபத்தில் மாயமானது. நகைக் கடன், விவசாயக் கடன் உட்பட பல்வேறு கடன்களை வழங்கும் இந்த வங்கியில், மாதத்திற்கு இரு முறை வாடிக்கையாளர்களின் தங்க நகைகளைச் சரிபார்ப்பது வழக்கம். கடந்த மே மாதம் இறுதியில் தங்க நகைகளைச் சரிபார்த்த போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த  சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 700 கிராம் தங்க நகைகள் இருந்த 40 பொட்டலங்களைக் காணவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் 4ம் தேதி காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், நகைகளை வங்கி ஊழியர்களே கொள்ளையடித்துள்ளதை கண்டுபிடித்து, 3 பெண் ஊழியர்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 ஊழியர்களும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வங்கி அதிகாரிகளே இத்தகைய கையாடலில் ஈடுபட்டு இருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை அம்மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.