பெட்டாலிங் ஜெயா:

 

லேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஜலான் புனஸ் என்ற இடத்தில் உள்ள 7-லெவன் கடையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக 7-லெவன் வணிக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கடை தற்போது மூடப்பட்டு, முழுமையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, கடையை திறப்பதற்கு உண்டான உரிய அனுமதி வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கூறியது.

பாதிக்கப்பட்ட ஊழியருடன் நேரடி தொடர்பு கொண்ட அனைவருமே மருத்துவ அதிகாரிகளால் சான்றளிக்கப்படும் வரை வீட்டு தனிமைப் படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊழியருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்று விசாரிப்பதற்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தெரிவிப்பதற்கும் சுகாதார அமைச்சகம் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக 7-லெவன் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கடைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வழக்கமான பராமரிப்பு, ஊழியர்களுக்கான தனிப்பட்ட சுகாதார நெறிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சமூக விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.