டில்லி

யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள்

நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க 7 முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர்.

வாராக்கடன் அளவுக்கு மீறி  அதிகரித்தால் யெஸ் வங்கி கடும் நிதி  நெருக்கடியில் சிக்கியது.  வங்கி நடத்தவும் நிதிநிலை பற்றாக்குறை ஏற்பட்டதால் ரிசர்வ் வங்கி பொறுப்பை ஏற்றுக் கொண்டு இயக்குநர்கள் குழுவைக் கலைத்தது.   யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் 3 ஆம் தேதி வரை ரூ.50000 வரை மட்டுமே எடுக்க அனுமதி அளித்தது.

ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க ஸ்டேட் வங்கி  முன் வந்தது.   மேலும் இந்த வங்கியில் ரூ.10000 கோடி முதலீடு  செய்யவும் ஒப்புதல் அளித்தது.   தற்போதுள்ள நிலையில் யெஸ் வங்கி திவால் ஆனால் அதன் தாக்கம் மற்ற வங்கிகளிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளது.  மேலும் வங்கிகள் செயல்பாடுகளில் கடும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே ஸ்டேட் வங்கியைப் போல் மேலும் 7 முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளனர்.  எச் டி எஃப் சி வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி  ஆகிய வங்கிகளும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆர்கே தாமனி, மற்றும் அசிம் பிரேம்ஜி போன்ற தனியார் முதலீட்டாளர்களும் இணைந்து இது குறித்து ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளனர்.