‘கஜா’ பாதித்த பகுதிகளில் 7லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை:

ஜா புயல் பாதித்த பகுதிகிளில் 7 லட்சம் மக்களுக்கு தொற்று நோய் பாதிக்காதவாறு  சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும்  மருத்துவ முகாம்கள்

கடந்த மாதம் (நவம்பர்) 16ந்தேதி அதிகாலை வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயலுக்கு நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை கண்டுள்ளது. புயல் காரணமாக உணவு, உடை, உறைவிடங்களை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக அங்குள்ள மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பாது காக்கும் வகையில்  தமிழக அரசு, அரசியல் கட்சிகள், தனியார் மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் சார்பாக மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றன. இந்த மருத்துவ முகாம் களில் அலோபதி மட்டுமின்றி, ஓமியோபதி, சித்தா மருத்துவர்கள் சார்பிலும் மருத்துவ முகாம் கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தனியார் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி – மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கஜா புயல்  பாதித்த பகுதிகளில் 7லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக வும், தமிழகஅரசின் விரைவான நிவாரண பணிகள் காரணமாக  ஒருவருக்கு கூட தொற்று நோய் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும்  வெளிமாநில பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 80சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, வெளிமாநில மின்வாரிய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.