காமராஜர் பல்கலை – தொலைநிலைக் கல்விப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை!

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்டத்தில், உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் இணைந்து படிக்கும் மாணாக்கர்களுக்கு மொத்தம் 10 வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடங்கள் வாரியாக 50க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பாடம் எடுக்கின்றனர்.

இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு இளங்கலை பிரிவிற்கு ரூ.175, முதுகலை பிரிவிற்கு ரூ.250 வீதமும் போக்குவரத்துபடியாக 50 ரூபாயும் வழங்கப்படும். பல்வேறு காரணங்களால் இவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர்கள் கூறியதாவது: 7 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. தொலைநிலைக் கல்வித் திட்ட அதிகாரிகளிடமும் இதுகுறித்து உரிய பதில் இல்லை. 2019 ஜனவரியில் வக்பு வாரிய கல்லுாரியில் நடத்திய வகுப்புகளுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் வரை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதேசமயம், இப்பிரச்சினை தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பிரச்சினை உள்ள சிலருக்கு மட்டும் சம்பளம் வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. அதுவும் விரைவில் வழங்கப்படும்” என்றார்.