தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 7புதிய கலை அறிவியல் கல்லூரிகள்! தமிழகஅரசு அனுமதி…

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 7புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, இந்த புதிய கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கல்வி நிறுவனங்கள், மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை தொடங்க அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில், தனியார் கல்லூரிகளை விட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குவிந்து வருகிறது. இதனால், புதியதாக மேலும் 7கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதவாது,

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி,

 கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கல்லூரியும்,

கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய இடங்களில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

இந்த கல்வியாண்டே தொடங்க உள்ளன. மேலும் இந்தாண்டு முதலே மாணவர் சேர்க்கையும் நடத்தியும் வகுப்புகளை தொடங்க மண்டல கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புதிய கல்லூரிகளிலும் பி.ஏ.தமிழ், பி.ஏ.,ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி கணக்கு உள்பட  5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கோவை, நாகை, கரூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, விருதுநகர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங் களில் 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை உடனடியாக தொடங்க ஆணை  அளிக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, முதற்கட்டமாக 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.