சென்னை:

றைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ராஜீவ் கொலை வழக்கு கைதிகளையும் நன்னடத்தை முறையில் விடுவிக்கலாம் என சிறைத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

இந்நிலையில்,  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

பல்வேறு குற்றங்களை செய்தோரை தண்டனை வழங்கி சிறைகளில் அடைப்பதன் நோக்கம் அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பது அல்ல; மாறாக அவர்கள் செய்தது தவறு என்பதை உணர்த்தி திருத்த வேண்டும் என்பது தான். குற்றங்களைச் செய்வதவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்த 10 ஆண்டுகள் போதுமானது தான். ஆயுள்தண்டனை சிறைக்கைதிகள் திருந்தி விட்டார்களா? என்பதை அறிவதற்காக அளவீடு அவர்களின் நன்னடத்தை தான். அதனால் தான் நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். இது முறையான, சரியான நடவடிக்கை தான்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்த வேண்டும்; அவர்களும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

7 தமிழர்களில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியின் உண்மைத் தன்மையையும், சாத்தியக்கூறுகளும் உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியது ஏன்? என்பதற்கான காரணங்களை பல முறை பாட்டாளி மக்கள் கட்சி விளக்கியுள்ளது.

தகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் ராஜிவ்காந்தி படுகொலைக்கும், பேரறிவாளனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வழக்கின் புலனாய்வின்போது பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து பதிவு செய்த தாகவும், அவர் தண்டிக்கப்பட அது தான் காரணம் என்றும் அவ்வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

பேரறிவாளன் தவிர மீதமுள்ள 6 தமிழர்களும் தவறான தகவல்கள் மற்றும் பொய்யான பதிவுகளின் அடிப்படையில் தவறுதலாக தண்டிக்கப்பட்டவர்கள் தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவது முழுக்க முழுக்க நன்னடத்தை அடிப்படையில் தான். அந்த வகையில் பார்த்தாலும் முதன்முதலில் விடுதலை செய்யப்பட வேண்டியது பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் தான். அவர்கள் தான் தமிழக சிறைகளில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

நன்னடத்தை அடிப்படையிலும் முன்னணியில் இருப்பது இவர்கள் தான். இளம் வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன், சிறையில் இருந்தபடியே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் வென்று குவித்துள்ளார். மேலும் தம்மைப் போலவே பலரையும் படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளார். மற்றவர்களும் இதேபோல் நன்னடத்தைக்காக பாராட்டு பெற்றுள்ளனர்.

இத்தகையவர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் சமூகத்திற்காக உழைக்கவும், கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறிய குடும்பக் கடமைகளை நிறைவேற்றவும் வாய்ப்புக் கிடைக்கும். இதற்காகவே அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

மத்தியப் புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்த சர்ச்சைகளும், நடைமுறைகளும் இவர்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக்கூடாது. அதற்கேற்ற வகையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.