கையை உயர்த்த எம் பிக்களுக்கு 7 முறை ஊதிய உயர்வு : வருண் காந்தி காட்டம்

சுல்தான்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையை உயர்த்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜவகர்லால்  நேருவின் கொள்ளுப்பேரன் வருண் காந்தி. இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சகோதரரும் இந்திரா காந்தியின் இளைய மகனுமான சஞ்சய் காந்தியின் மகன் ஆவார். இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் தாய் மேனகா காந்தி மத்திய அமைச்சர் ஆவார். இவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது வருண் காந்தி, “பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நான் தொடர்ந்து குரல் எழுப்பு வருகின்றேன். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அவர்களின் உழைப்பு, அனுபவம், நேர்மை ஆகியவற்றின அடிப்படையில் ஊதிய உயர்வு பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை மாறாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் கைதூக்கியதற்கு மட்டுமே இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நான் கேள்வி எழுப்பிய உடன் எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. இவ்வாறு எதற்கு எங்கள் பிரச்னையை அதிகரிக்கிறீர்கள் என என்னை கேட்டார்கள்” என பேசி உள்ளார்.