சிம்லா: போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, இமாச்சலப் பிரதேசத்தின் குல்லுமனாலியில் 7 சுற்றுலாப் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள புகழ்பெற்ற அடல் ரோஹ்டாங் சுரங்கப் பாதையில், தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கே பாட்டுப்பாடி நடனமாட முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த சுரங்கப் பாதையில் பாட்டுப்பாடி நடனமாட முயன்றதானது மிகப்பெரிய போக்குவரத்து விதிமீறலாகும். இதன்மூலம், அப்பாதையில் பயணம் செய்யக்கூடிய பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும் அது.

குல்லு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளரவ் சிங், “சுரங்கப் பாதையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வேறுபல சுற்றுலாப் பயணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய விதிமுறைகள் எந்த சூழலிலும் அனுமதிக்கப்படாது.

அந்த சுரங்கப்பாதையில் வேகமாக செல்லுதல், பிற வாகனங்களை முந்திச் செல்லுதல், வழக்கமானதைவிட மெதுவாக செல்லுதல் போன்றவை அனுமதிக்கப்படாது” என்றுள்ளார் அவர்.