சென்னை : சுயமருத்துவம் செய்துக் கொள்ளும் 70% நோயாளிகள்

சென்னை
நோயாளிகளில் சுமார் 70% பேர் மருத்துவர்களை அணுகாமல் சுயமாக மருத்துவம் செய்துக் கொள்வதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சிறு சிறு நோயால் பாதிக்கபட்டவர்கள் சுயமருத்துவம் செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மருந்துக் கடைகளுக்கு சென்று தங்களின் உடல் நிலை பற்றி தெரிவித்து அதற்கான மருந்துகளை மருத்துவரை கலந்தாலோசிக்காமலே உட் கொள்கின்றனர். ஒரு சிலர் முன்பு மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்தை மருந்துக்கடைகளில் இருந்து நேரடியாக வாங்கி உட்கொள்கின்றனர்.

இது குறித்து சென்னையை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் தனது ஆய்வில் சுமார் 70% பேர் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் சுய் மருத்டுவம் செய்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கு மாம்பலத்தில் உள்ள மருந்தாளுனர் ஒருவர் தனது மருந்துக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தாம் இவ்வாறு மருந்து கொடுப்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவிக்கின்றார்.

ஆனால் அவர் அளிக்கும் பல ஆண்டிபயாடிக் என்னும் உயிர் காக்கும் மாத்திரைகளில் பல மருத்துவர்களின் பரிந்துரையின் படி மட்டுமே விற்க வேண்டியதாகும். அவை வைரஸ் ஜுரங்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டியவை ஆகும். அதே வேளையில் டெங்கு போன்ற நோய்களும் வெறும் ஜுரம் என நோயாளிகள் கருதுவதால் இத்தகைய மருந்துகளை உட்கொண்டு அந்த நோய் குணமாகாமல் அவதியுறுகின்றனர்.

இது குறித்து அந்த அறிக்கையில் சுய மருத்துவம் அதுவும் ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு செய்துக் கொள்வது மிகவும் அபாயகரமானது என தெரிவித்துள்ளது. தேவையற்ற நேரத்தில் இத்தகைய மருந்துகளை உட்கொள்வதால் தேவைப்படும் நேரத்தில் இது பயன் தராமல் போகும் என அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரபல மருத்துவர் முருகானந்தம், “இவ்வாறு சுயமருத்துவம் செய்துக் கொள்வதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அத்துடன் முக்கிய மருந்துகள் டாக்டர்களின் மருந்துச் சீட்டு இன்றி விற்கப்படுவதை தடுக்க வேண்டும். மருந்துவர்கள் ஆலோசனை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள்வதால் வேறு பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.