மும்பை:

இந்தியாவை சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த கல்வியாண்டில் சேர முடியாமலும், மாணவர் சேர் க்கை ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு மும்பையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் தற்போது வரை விசா நேர்காணலுக்கான ஒதுக்கீடு கிடைக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக விசா நேர்காணலுக்கான ஒதுக்கீடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தூதரகத்தில் அதிக கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

கூட்டத்திற்கு தகுந்தார்போல் விசா நேர்காணலுக்கு கூடுதல் ஏற்பாடுகள் அங்கு செய்யவில்லை. இதனால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் தலையிட வேண்டும் என மாணவ மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

இப்பிரச்னை தொடர்பாக மாணவர்கள் டுவிட்டர் மூலம் ஜெர்மனியில் உள்ள அதிகாரிகளுக்கும், இங்குள்ள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கும் கல்வி ஆண்டில் மாணவ மாணவிகள் ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் சேர் ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை மும்பையில் உள்ள ஜெர்மன் தூதரகத்திலும் மட்டும் நிலவுகிறது.

இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், ‘‘ நாட்டில் உள்ள இதர தூதரங்களிலும் எனது நண்பர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அங்கெல்லாம் இந்த பிரச்னை இல்லை. அங்கு எளிதாக விசா பெற்றுவிட்டனர். மும்பையில் மட்டும் தான் இப்பிரச்னை உள்ளது’’ என்றார்.

பெங்களூரு, சென்னை, புதுடில்லி, கொல்கத்தாவில் உள்ள ஜெர்மன் தூதரகங்களிலும் விசா வழங்கப்பட் டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள தூதரகத்தில் தான் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். மும்பையில் மட்டும் இந்த பிரச்னை இருப்பது பலருக்கும் கவலையை ஏற்ப டுத்தியுள்ளது.

மாணவி அர்ச்சனா என்பவர் கூறுகையில்,‘‘மாணவர் சேர்க்கை பெறுவதற்காக வங்கியின் கடன் பெற்று அந்த தொகை எனது வங்கி கணக்கில் காட்டப்பட்டுவிட்டது’’ என்றார். மேலும், பல மாணவ மாணவிகள் விடுதி கட்டணங்களை செலுத்திவிட்டனர்.

இதன் மூலம் அவர்களது சேர்க்கை உறுதியாகிவிட்டது. மேலும், சிலர் கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டனர். கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி விசா பெறுவதற்காகன நடைமுறைகளை தொடங்கிய ஒரு மாணவருக்கு இன்னும் விசா நேர்காணலுக்கு ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

அதனால் இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட்டால் மட்டுமே மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்காமல் தடுக்கப்படும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.