70வது குடியரசு தினம் இன்று: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுகிறார் குடியரசுத் தலைவர்

டில்லி,

நாடு முழுவதும் இன்று 70வது இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பு காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் மோடி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.

விழாவின்போது, குடியரசுத் தலைவர் தேசிய கீதம் ஒலிக்க தேசியக் கொடி ஏற்றுவார். அதைத்தொடர்ந்து வீர தீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படும்.  அசோக சக்கரா, கீர்த்தி சக்கரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, டில்லி குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.  பிரம்மோஸ் ஏவுகணை அணிவகுப்பு, குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினத்தையொட்டி கவர்னர் பன்வாரிலால்  தேசிய கொடி ஏற்றி சிறப்புரை யாற்றுகிறார்.