சென்னை:

71வது குடியரசு தினத்தையொட்டி சென்னை  காமராஜர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர்  போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை கடற்காலை சாலையான காமராஜர் சாலையில் பிரமாண்ட அணிவகுப்புகளுடன் குடியரசுத் தின விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

காலை சுமார் 7.50 மணி அளவில் முதல்வர் எடப்பாடி காவல்துறையினர் அணிவகுப்புடன் விழா  மேடைக்கு வந்த நிலையில், சரியாக அடுத்த 5 நிமிடத்தில் ஆளுநர் பன்வாரிலும் விழா நடைபெறும் இடத்து வந்தடைந்தார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படை தளபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் சரியாக 8 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அப்போது விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் தமிழக காவல்துறையினர், பள்ளி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகின்றன.