டெல்லி: நாட்டின் 72வது குடியரசுத் தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. அதே வேளையில் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது. இதனால் தலைநகர் டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு காவல்துறையினர், துணை ராணுவ வீரர்கள் உள்பட  ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தின நாளையொட்டி,  டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் குடியரசு தின விழா நடைபெற உள்ளது.  பலத்த கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவப் படையும் பங்கேற்க உள்ளது.  இதையடுத்து, நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநில கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வாகன அணிவகுப்பு நடைபெறுகின்றன.

வழக்கமாக, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளைக் காண 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த முறை, வெறும் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிரான டிராக்டர் பேரணியில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த பேரணி அமைதியான முறையில்  நடைபெறும் என்று விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.  இதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் குவிந்துள்ளனர்.

விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே டிரக் லாரிகளை நிறுத்தியும் பேரிகார்டு தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். டெல்லி எல்லையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள விஜய்சவுக் பகுதியைச் சுற்றியுள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளன.

அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடக் கூடும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளின் இடங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. தலைநகர் டெல்லி பரபரப்பாகவே காணப்படுகிறது.