சென்னை:

நாட்டின் 73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் திறமை யாக  பணியாற்றிய 16 காவல்துறை அதிகாரிகளுக்கு  சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதக்கங்களை நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவிப்பார்.

நாட்டின் 73 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்ற உள்ளதால், தலைமைச்செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தன்று, சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும்  தமிழக அரசு பதக்கங்கள் வழங்கி கவுரவித்து வருவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகள் யார் என்பதை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு,

கூடுதல் காவல்துறை இயக்குநர் ப. கந்தசுவாமி,

கூடுதல் காவல் ஆணையாளர் தினகரன்,

காவல் ஆய்வாளர் ஜா. நாகராஜன்,

காவல் ஆய்வாளர் சி.செந்தில்குமார்,

பெண் தலைமைக் காவலர் சா. டெய்சி

உள்பட 6 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.

 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். வனிதா,

காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. புருஷோத்தமன்,

காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கிருஷ்ணன்,

காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன்,

காவல் ஆய்வாளர் எஸ். கிரிஸ்டின் ஜெயசில்,

காவல் ஆய்வாளர் ப. காசிவிஸ்வநாதன்,

காவல் ஆய்வாளர் ஏ. ஞானசேகர்,

காவல் ஆய்வாளர் கோ. அனந்தநாயகி,

காவல் ஆய்வாளர் து. நடராஜன்,

காவல் ஆய்வாளர் பி. தேவி

ஆகிய 10 பேருக்கு சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.